மும்பை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வாழைப்பழம் விற்பனை செய்வதாக ரூ.17 லட்சம் மோசடி


மும்பை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வாழைப்பழம் விற்பனை செய்வதாக ரூ.17 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 Jan 2019 4:30 AM IST (Updated: 11 Jan 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் இருந்து மும்பை ஏற்றுமதி நிறுவனத்திற்கு வாழைப்பழம் விற்பனை செய்வதாக ரூ.17 லட்சம் மோசடி செய்த வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையை சேர்ந்தவர் இந்தர்பால்சிங் (வயது 64). இவர் பழ ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கம்பம், 

திருச்சி தில்லை நகரை சேர்ந்தவர் ராஜா வெங்கட்சுப்பிரமணியன். பழ வியாபாரி. அவர் இமெயில் மூலம் என்னிடம் தொடர்பு கொண்டார். அப்போது தான் வாழைப்பழங்களை விற்பனை செய்து வருவதாக கூறினார்.

தேனி மாவட்டம், கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள பதனிடும் மையத்தில் வாழைப்பழங்களை வைத்திருப்பதாகவும், ஒப்பந்த அடிப்படையில் விற்பனைக்கு தருகிறேன் என்றார். இதை நம்பி வங்கி மூலம் ரூ.17 லட்சத்தை ராஜா வெங்கட்சுப்பிரமணியன் வங்கி கணக்கில் 2 தவணைகளாக செலுத்தினேன்.

ஆனால் ஒப்பந்தப்படி அவர் வாழைப்பழங்களை அனுப்பவில்லை. இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டு கேட்டேன். பின்னர் கம்பம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள அவருடைய அலுவலகத்துக்கு நேரில் வந்தேன். அவரிடம் வாழைப்பழங்கள் அனுப்பும்படி கேட்டதற்கு, தர முடியாது என்றும், கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் ராஜா வெங்கட்சுப்பிரமணியன் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story