மல்லூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


மல்லூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2019 4:15 AM IST (Updated: 12 Jan 2019 12:35 AM IST)
t-max-icont-min-icon

மல்லூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

பனமரத்துப்பட்டி, 

இதுபற்றிய விவரம் வருமாறு:-

மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி வெடிகாரன்புதூர் களர்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 54). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

ராஜா கடந்த 9-ந்தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நாழிக்கல்பட்டி பஸ்நிறுத்தம் அருகே சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ராஜா மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் சேலம் ஏற்காடு அடிவாரம் பகுதி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன் (37). இவர் அஸ்தம்பட்டியில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 3-ந்தேதி இரவு ராசிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாசநாயக்கன்பட்டி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் அங்கிருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய மணிகண்டன் கீழே விழுந்தார். இதில் தலையில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story