குடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Jan 2019 10:30 PM GMT (Updated: 11 Jan 2019 7:08 PM GMT)

குடிநீர் கட்டணத்தை குறைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பனமரத்துப்பட்டி, 

இதுபற்றிய விவரம் வருமாறு:-

மல்லூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மல்லூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம், வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டதாக கூறி நேற்று 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

வீட்டு வரி இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது, அதனை குறைக்க வேண்டும். அதேபோல் குடிநீர் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். பேரூராட்சியில் இறப்பு சான்றிதழ் பெற ரூ.200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனை குறைத்து பழைய தொகையே வசூல் செய்ய வேண்டும். குடிநீர் இணைப்பு பெற டெபாசிட் கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்பப்பெற வேண்டும். சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் பைபாசில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அங்கு சர்வீஸ் ரோட்டை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கோரிக்கைகள் அனைத்தையும் அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ விஜயகணேசனிடம் மனுவாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், என பேரூராட்சி செயல் அலுவலர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் மல்லூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story