தொப்பூர் கணவாயில் விபத்து: 70 அடி பள்ளத்தில் லாரி இறங்கியது டிரைவர் உள்பட 2 பேர் சாவு


தொப்பூர் கணவாயில் விபத்து: 70 அடி பள்ளத்தில் லாரி இறங்கியது டிரைவர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 8:01 PM GMT)

தொப்பூர் கணவாயில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி 70 அடி பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நல்லம்பள்ளி,

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நெல்லைக்கு புறப்பட்டு வந்தது. இந்த லாரியை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரத்தை சேர்ந்த சின்னராஜ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அங்கு கணவாய் பகுதியில் சுங்கச்சாவடி தினக்கூலி தொழிலாளர்கள் 10 பேர் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிக்கெட்டு ஓடி சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நல்லம்பள்ளி அருகே உள்ள தொம்பரகாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி(48), பச்சையப்பன்கொட்டாயை சேர்ந்த ராஜகன்னி (35), டொக்குபோதனஅள்ளியை சேர்ந்த சின்னசாமி(50) ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். ராஜகன்னி, சின்னசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அந்த லாரி சாலையோரம் இருந்த சுமார் 70 அடி பள்ளத்தில் வேகமாக இறங்கியது. இதில் லாரி பாறை மற்றும் மரங்களின் மீது மோதியதில் டிரைவர் சின்னராஜ் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராஜகன்னி, சின்னசாமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார், இடிபாடுகளில் சிக்கி இறந்த டிரைவர் சின்னராஜ் மற்றும் தொழிலாளி கந்தசாமி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொப்பூர் கணவாயில் பள்ளத்தில் இறங்கிய லாரியை மீட்க போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக ராட்சத மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் லாரியில் இருந்து கொட்டிய உருளைக்கிழங்கு மூட்டைகளை மேலே கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story