1,560 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்–நிதி உதவி; அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
1,560 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன், நிதி உதவியை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
சிவகங்கை,
மாவட்ட சமூகநலத்துறை மூலம் ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு 1,560 பேருக்கு ரூ.9 கோடியே 57 லட்சத்து 304 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அதில் அமைச்சர் பேசியதாவது:– பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா திருமணத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் தாலிக்கு தங்கத்துடன் பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கினார்
அதாவது ஒரு பெண் கல்வியறிவை பெறும் போது அவரது குடும்பமே வளர்ச்சி பெறும் என்ற உயரிய கருத்தினை மனதில் கொண்டும், பெற்றோர்களுக்கு உதவும் பொருட்டும் திருமணத்திற்கான நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
தற்போது நடைபெறும் விழாவில் 1,560 பேருக்கு 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கமும், அத்துடன் நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இதில் பட்டம் படித்த 804 பெண்களுக்கு, ரூ.50 ஆயிரம் வீதமும், 10–ம் வகுப்பு படித்த 756 பெண்களுக்கு ரூ.25ஆயிரமும் திருமண நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சமூகநலத்துறை அலுவலர் வசந்தா, கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பாண்டி, சசிக்குமார், பலராமன், ராஜா, இளையான்குடி நிலவங்கி தலைவர் பாரதிராஜன், பொதுக்குழு உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.