போலீஸ் சான்றிதழ்களை இணையதளத்தில் பெறும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
மாவட்டத்தில் போலீஸ் சான்றிதழ்களை இணையதளத்தில் பெறும் வசதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
போலீஸ் மூலமாக தடையில்லா சான்று, நன்னடத்தை சான்று ஆகியவைகள் தேவைப்படுபவர்கள் மாவட்ட கருவூலத்தில் ரூ.ஆயிரம் செலுத்தி பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து சான்றிதழ் பெற்று வருகின்றனர். இந்த முறையை தற்போது மாற்றி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போலீஸ்துறை மூலம் பெற விரும்பும் சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறும் வசதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– மாவட்டத்தில் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தனிநபர் விவரம் சரிபார்க்கும் சான்றிதழ், வேலை தொடர்பான சான்றிதழ் மற்றும் வீடுகளை வாடகைக்குவிட விரும்புபவர்கள் குடிவர உள்ளவர்கள் குறித்த விவர சான்றிதழ், வீட்டில் வேலை பார்ப்பவர்கள் குறித்த விவர சான்றிதழ் ஆகியவைகளை இணையதளத்தின் மூலம் பெற்று கொள்ளலாம்.
இதில் தனிநபர் விவர சான்றிதழுக்கு ரூ.500–ம் மற்ற சான்றிதழ்களுக்கு ரூ.ஆயிரமும் செலுத்த வேண்டும். கட்டணத்தை இணையதளத்தில் செலுத்தலாம். இந்த சான்றிதழ் பெற போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. கேட்கப்படும் சான்றிதழ் தொடர்பான விவரங்களை அந்தந்த பகுதி போலீசார் விசாரித்து 15 நாளில் சான்றிதழ்களை வழங்குவார்கள். சான்றிதழின் நிலை குறித்த விவரத்தை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து புதிய முறை மூலம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 3 பேருக்கு இணையதளத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதேபோல கம்பெனிகளில் வேலை செய்யும் ஊழியர், வாடகைதாரர், வீட்டு வேலையாட்களின் நன்னடத்தை குறித்த சான்று பெற போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு இணையவழி சேவை தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப்பதிவேடு போலீஸ் துணை சூப்பிரண்டு சக்கரவர்த்தி, திருப்புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, மாவட்ட சூப்பிரண்டு நேர்முக உதவியாளர் சசிரேகா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், பெண் சப்–இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.