39 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகள் தொடக்கம்; பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் 39 அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளுக்காக வகுப்புகள் தொடங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர் பொங்கல் பண்டிகைக்கு பின்னர் இம்மாத இறுதியில் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 39 அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை யூனியனில் ஆமணக்குநத்தம் அரசு நடுநிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை மேலரதவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, மதுரை சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி, நரிக்குடி யூனியனில் உள்ள சேதுராயநேந்தல் அரசு நடுநிலைப்பள்ளி, தச்சனேந்தல் நடுநிலைப்பள்ளி, மேலபருத்தியூர், செல்லையாபுரம், கல்லங்குடி, உடையசேர்வைக்காரன்பட்டி, வீரஆலங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நிடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.
திருச்சுழி யூனியனில் உள்ள எர்ரம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் சாமிநாதபுரம், இனாம்கரிசல்குளம், ராஜபாளையம் சொக்கலாம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், ஊரணிப்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணன்கோவில் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர், ஆசில்லாபுரம் ஆகிய கிராம அரசு நிடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப்பள்ளி, மருளுத்து கிராம அரசு நடுநிலைப்பள்ளி, காரியாபட்டி யூனியனில் அரசகுளம், சோலைக்கவுண்டன்பட்டி, மேலத்துலுக்கன்குளம், சாத்தூர் யூனியனில் நம்பிராஜபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.
சிவகாசி யூனியனில் ஊராம்பட்டி, அய்யனார்புரம் காலனி, வடபட்டி, வெள்ளையாபுரம், செங்கமலநாச்சியார்புரம், மத்திய சேனை, சித்தமநாயக்கன்பட்டி, குமிழங்குளம், ரெங்கபாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வத்திராயிருப்பு யூனியனில் நெடுங்குளம் அரசு நடுநிலைப்பள்ளி, வெம்பக்கோட்டை யூனியனில் துரைச்சாமிபுரம், கோட்டைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிகள் உள்பட 39 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாதம் இறுதியில் அரசு நடுநிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களை கொண்டு இந்த வகுப்புகள் நடத்தப்படும். இதற்காக அந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.