ஏரியை தூர்வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்


ஏரியை தூர்வாரக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 11:00 PM GMT)

ஏரியை தூர்வாரக்கோரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சியை அடுத்த சிறுகாம்பூர் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஒன்றிணைந்து நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மண்ணச்சநல்லூர் ஒன்றிய விவசாய தொழிற்சங்க துணை செயலாளர் நல்லையன் தலைமை தாங்கினார். செல்வம், ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருச்சி புறநகர் மாவட்ட விவசாய தொழிற்சங்க தலைவர் சுப்பிரமணியன் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் சிதம்பரம் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் பெரியசாமி நன்றி கூறினார்.

போராட்டத்தில் சோழங்கநல்லூர், சிறுகாம்பூர், நெ.2கரியமாணிக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தில் மண்ணச்சநல்லூர் தாலுகா, நெ.2 கரியமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சோழங்கநல்லூரில் உள்ள ஏரியை தூர்வார வேண்டும், புள்ளம்பாடி பாசன வாய்க்காலை தூர்வாரி தேவையான இடத்தில் தடுப்பணை அல்லது கால்வாய் அமைத்து மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை ஏரியில் சேமித்து நெ.2கரியமாணிக்கம், திருப்பைஞ்சீலி, தீராம்பாளையம், அழகிய மணவாளம், மேல்பத்து மற்றும் கிளியநல்லூர் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

Next Story