புதுக்கடை அருகே பரிதாபம்: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் பலி


புதுக்கடை அருகே பரிதாபம்: கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 12 Jan 2019 5:03 AM IST (Updated: 12 Jan 2019 5:48 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.

புதுக்கடை,

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே குற்றிங்கல்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). இவர் மார்த்தாண்டம் மதுவிலக்கு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு வசந்தா என்ற மனைவியும், ஜெனிபா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று அதிகாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். வீட்டில் இருந்து புதுக்கடை-கருங்கல் செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளை திருப்பினார்.

அப்போது, தூத்தூரில் இருந்து கருங்கல் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்வராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னர், இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்து குறித்து கார் டிரைவர் சின்னத்துறையை சேர்ந்த ஷாஜூ என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


Next Story