பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் குலை விற்பனை மும்முரம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் குலை விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 13 Jan 2019 3:45 AM IST (Updated: 12 Jan 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரும்பு, மஞ்சள் குலை விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

கோவில்பட்டி, 

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து கரும்பு கட்டுகள் விற்பனைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

கோவில்பட்டி மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு, கடலையூர் ரோடு, எட்டயபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் கரும்பு கட்டுகளை சாலையோரமாக அடுக்கி வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.450 முதல் ரூ.600 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று விளாத்திகுளம் அருகே வேம்பார் பகுதியில் இருந்து பனங்கிழங்குகளை வியாபாரிகள் விற்பனைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு வந்துள்ளனர். 10 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.

கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு பகுதியில் இருந்து மஞ்சள் குலைகளை விற்பனைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரு மஞ்சள் குலை ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் அந்த கோவில்பட்டியில் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

இதேபோன்று ஏரல் மெயின் பஜாரிலும் கரும்பு கட்டுகள், வாழைத்தார்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.600-க்கும், ஒரு நாட்டு வாழைத்தார் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்படுகிறது.

Next Story