போலீஸ் பாதுகாப்புடன் கடை உரிமையாளர்களுக்கு சாராயம் வினியோகம்; அரசு வடிசாராய ஆலையில் பரபரப்பு
புதுவை அரசு வடிசாராய ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், சாராயக்கடை உரிமையாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சாராயம் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அரசு வடிசாராய ஆலையில் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லியனூர்,
புதுவை மாநிலம் வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் அரசு வடிசாராய ஆலை உள்ளது. இந்த ஆலையில் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் லிட்டர் சாராயம் புதுவை மாநிலத்தில் உள்ள சாராயக்கடைகளுக்கு விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அரசு வடிசாராய ஆலையில் ஊழியர்கள் 7–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக சாராய கடைகளுக்கு விற்பனைக்கு வழங்கப்படவில்லை. இதனால் சாராயக்கடை உரிமையாளர்கள் வடிசாராய ஆலை வாரியத்தலைவர் விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் வடிசாராய ஆலை மேலாண் இயக்குனர் வின்சென்ட்ராயரிடம் கோரிக்கை விடுத்தனர். வடிசாராய ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களிடம் வாரியத்தலைவர் விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் வடிசாராய ஆலை மேலாண் இயக்குனர் வின்சென்ட்ராயர் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சாராயக்கடை உரிமையாளர்கள் ஆலையின் நுழைவு வாயிலை இழுத்து பூட்டினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்–இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது சாராயக்கடை உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக கடைகளுக்கு சாராயம் வினியோகிக்கப்படாததால் ரூ.50 லட்சம் வியாபாரம் பாதிக்கப்பட்டது. எனவே எங்களுக்கு உடனடியாக சாராயம் வினியோகம் செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வடிசாராய ஆலை அதிகாரிகளை அழைத்து பேசினார். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கடை உரிமையாளர்களுக்கு சாராயம் வினியோகம் செய்யப்பட்டது.