குன்னூர் அருகே கண்ணியில் சிக்கி குட்டி கரடி சாவு உடலை மீட்க விடாமல் தாய் கரடி பாசப்போராட்டம்
குன்னூர் அருகே கண்ணியில் சிக்கி குட்டி கரடி இறந்தது. அதன் உடலை எடுக்க விடாமல் தாய் கரடி பாசப்போராட்டம் நடத்தியது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் திசை மாறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வருகின்றன. அப்போது மனித–வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. மேலும் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளையும் அவை சேதப்படுத்துகின்றன. சமீப காலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள சாலையோர வனப்பகுதியில் யாரோ மர்ம ஆசாமிகள் காட்டுப்பன்றியை வேட்டையாட கண்ணி வைத்துள்ளனர். இந்த கண்ணியில் நேற்று காலை குட்டி கரடி ஒன்று சிக்கி தவித்தது. அதனருகில் தாய் கரடி சத்தமிட்டபடி நின்று கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமையில் வனத்துறையின் அதிவிரைவு மீட்பு குழுவினர் விரைந்து வந்து, பார்வையிட்டனர். அப்போது கண்ணியில் சிக்கிய குட்டி கரடி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தாய் கரடியை விரட்டிவிட்டு, குட்டி கரடியின் உடலை மீட்க துப்பாக்கியுடன் வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால் தாய் கரடி அங்கிருந்து செல்லாமல் பாசப்போராட்டம் நடத்தி கொண்டிருந்தது. மேலும் வனத்துறையினரை துரத்தியது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் தீப்பந்தம் கொளுத்தி தாய் கரடியை அங்கிருந்து வனத்துறையினர் விரட்டினர். அதைத்தொடர்ந்து குட்டி கரடியின் உடலை மீட்டு, அதே வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் தாய் கரடியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.