கும்பகோணத்தில் விடுதி மேலாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில், விடுதி மேலாளர் வீட்டில் ரூ.10¾ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லம் நகரை சேர்ந்தவர் சிராஜுதீன்(வயது 60). கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக பணியாற்றி வரும் இவர், கடந்த மாதம்(டிசம்பர்) குடும்பத்துடன் மெக்காவுக்கு புனித பயணம் சென்றார். இதனால் அவருடைய வீட்டை, அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் கவனித்து வந்தார்.
நேற்று காலை சிராஜுதீனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, அங்கு இருந்த 6 இரும்பு பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் 40 பவுன் நகைகளும், ரூ.1 லட்சமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10¾ லட்சம் ஆகும்.
வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோக்களை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர்.
மோப்ப நாய் மூலமாக துப்பு துலக்கும் பணியும் நடந்தது. வீட்டை சுற்றிச்சுற்றி வந்த மோப்ப நாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கும்பகோணத்தில் தனியார் விடுதி மேலாளரின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story