கடம் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற மூதாட்டியின் உருவத்தை களிமண்ணால் செய்த கல்லூரி மாணவர்


கடம் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற மூதாட்டியின் உருவத்தை களிமண்ணால் செய்த கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 13 Jan 2019 4:19 AM IST (Updated: 13 Jan 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

கடம் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற மூதாட்டியின் உருவத்தை களிமண்ணால் உருவாக்கி கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.

மானாமதுரை,

மண்பாண்ட பொருட்கள் குறித்த ஆய்விற்காக சென்னையில் இருந்து மாணவர் குமாரவேல்(வயது 23) மானாமதுரைக்கு வந்தார். இவர் சென்னை அரசு கவின் கலை கல்லூரியில் எம்.எப்.ஏ. செராமிக் டிசைன் படிப்பு படித்து வருகிறார். மண்பாண்ட பொருட்களுக்கு புகழ் பெற்ற மானாமதுரை நகரத்தில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சீசனுக்கு தகுந்தவாறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து சாதனை படைத்து வருகின்றனர்.

கார்த்திகை விளக்கு, பொங்கல் பானை, தண்ணீர் பானை உள்ளிட்ட கலைநயம் மிக்க பல்வேறு பொருட்களையும் தயாரிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள சிருவை என்ற ஊரைச் சேர்ந்த மாணவர் குமாரவேல் மண்பாண்ட பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதில் மண் தேர்வு, மண் கலப்பது, தொழிலாளர்களின் கை வண்ணம் குறித்து ஆய்வு மேற்கொள்வதுடன், அவர்களிடம் இருந்து மண்பாண்ட தயாரிப்பு குறித்த பயிற்சியும் பெற்று வருகிறார். மண்பாண்ட தயாரிப்பில் நவீனத்துவம் குறித்தும் தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். கடம் தயாரிப்பில் உலகப்புகழ் பெற்றவர், மறைந்த மூதாட்டி மீனாட்சியம்மாள். இவர் 2014-ம் ஆண்டு சிறந்த கடம் தயாரிப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர்.

இந்தநிலையில் தேசிய விருது பெற்ற மூதாட்டி மீனாட்சியம்மாளின் மார்பளவு சிலையை மாணவர் குமாரவேல் களிமண்ணால் வடிவமைத்துள்ளார். இதுபற்றி மாணவர் கூறும்போது, தேசிய விருது பெற்ற கடம் வித்வான்களின் உருவத்தை களிமண்ணால் உருவாக்கி உள்ளேன். அந்த வகையில் கடம் தயாரிப்பில் தேசிய விருது பெற்ற மூதாட்டி மீனாட்சியம்மாளின் உருவத்தை களிமண்ணால் உருவாக்கியது, எனக்கு பெருமையாக உள்ளது.

ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள நான், பள்ளி அளவில் பல பரிசுகளை பெற்றுள்ளேன். அரசு ஓவியக்கல்லூரியில் பயில விண்ணப்பம் செய்திருந்தேன். ஆனால் செராமிக் டிசைனிங்கில் தான் இடம் கிடைத்தது. தற்போது இதில் அதிக அளவு ஆர்வம் காட்டி கல்லூரியில் தொடர்ந்து சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறேன். மானாமதுரை மண் குறித்து அறிந்ததில் இருந்து இங்கு வந்து பயிற்சி பெறவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேறி உள்ளது என்றார்.

Next Story