உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திசையன்விளை ,
நெல்லை மாவட்டம் உவரி வங்க கடலோரம் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோவில், பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுவாமி சுயம்புவாக அருள்புரிந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை அலங்கார மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை ஆகியவை நடந்தது. பின்னர், யானை மீது கொடிப்பட்ட ஊர்வலமும், கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது.
அதைத்தொடர்ந்து கொடிமரத்தில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள், பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து விநாயகர் வீதிஉலா நடந்தது. மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை இந்திர விமானத்தில் வீதிஉலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தேர் திருப்பணி குழு தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, விநாயகர் வீதிஉலா, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 21-ந்தேதி (திங்கட்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. 22-ந்தேதி பஞ்சமூர்த்தி வீதிஉலாவும், இரவில் தெப்ப திருவிழாவும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். 9-ம் திருவிழா அன்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story