3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார்


3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார்
x
தினத்தந்தி 13 Jan 2019 11:30 PM GMT (Updated: 13 Jan 2019 9:16 PM GMT)

புதுவையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசு ஊழியர் மனைவி கொலை வழக்கில் கொலையாளி சிக்கினார். பெண் டாக்டரிடம் நகை பறித்த வழக்கு விசாரணையின்போது இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அரும்பார்த்தபுரம் ஆனந்தம் நகர் அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 39). சித்த டாக்டரான இவர் வில்லியனூர் மெயின்ரோட்டில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கிளினிக்கிற்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) என்பவர் சிகிச்சைக்காக அடிக்கடி வந்து சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவும் கிளினிக்கிற்கு வந்த இவர் தமிழ்ச்செல்வி மட்டும் தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் சங்கிலியை பறிக்கும் விதமாக மின்சார வயரால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.

இதில் தமிழ்ச்செல்வி கழுத்து நெரிபட்டு மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக நினைத்த ஆறுமுகம் அவரது கழுத்தில் கிடந்த 7 சவரன் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இந்தநிலையில் தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து கிளினிக்கிற்கு வந்து பார்த்தபோது அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெட்டியார்பாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரிடம் தமிழ்ச்செல்வி நடந்த விவரங்களை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை பிடிக்கும் பணியில் ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் ஆகியோர் இறங்கினார்கள். போலீசாரின் தொடர் வேட்டையில் ஆறுமுகம் போலீசாரின் பிடியில் சிக்கினார்.

அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் குட்டு அம்பலமானது. அதாவது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்விவரம் வருமாறு;–

முத்தியால்பேட்டை கணபதி நகரை சேர்ந்த அரசு ஊழியர் நம்பிராஜன் மனைவி கலைவாணி என்ற பெண் கடந்த 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21–ந்தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். ஆனால் போலீசாருக்கு இந்த கொலை தொடர்பாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள ஆறுமுகத்துக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ஆறுமுகம் கலைவாணியின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்தது. உறவினர் என்ற போர்வையில் கலைவாணியின் வீட்டிற்கு வந்து கொலையை செய்து நகையை கொள்ளையடித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதேபோல் ரெட்டியார்பாளையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த கலைவாணியின் தாயான கிருஷ்ணவேணியும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஏனெனில் அங்கும் நகை மாயமாகி இருந்தது. இதிலும் ஆறுமுகத்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட ஆறுமுகம் திருமணத்துக்குப்பின் புதுச்சேரி வந்து வசித்துள்ளார். இங்கு கொத்தனார் வேலை செய்து வந்த இவர் இதுபோன்று தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


Next Story