சிறை கைதி மர்ம சாவால் காலியான இடம்: சப்- இன்ஸ்பெக்டர் இல்லாத பாகூர் போலீஸ் நிலையம்


சிறை கைதி மர்ம சாவால் காலியான இடம்: சப்- இன்ஸ்பெக்டர் இல்லாத பாகூர் போலீஸ் நிலையம்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 9:16 PM GMT)

சிறை கைதி இறந்த விவகாரத்தில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் பாகூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது.

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஜெய குருநாதன். புதுச்சேரியை யொட்டி உள்ள ரெட்டிசாவடி கரிக்கல்நகரை சேர்ந்த ஜெயமூர்த்தி (வயது 21) என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கடந்த நவம்பர் 24-ந்தேதி பாகூர் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நவம்பர் 28-ந்தேதி ஜெயமூர்த்தி இறந்து போனார்.

ஆனால் போலீசார் தாக்கியதில் தான் அவர் இறந்து போனார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஜெயமூர்த்தியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அந்த இடம் காலியாக இருந்து வருகிறது. கடந்த 2 மாதங்களாக வேறு யாரும் நியமிக்கப்படாததால் பாகூர் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

பாகூர் பகுதியை ஒட்டியுள்ள சோரியாங்குப்பத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வருகிற 19-ந் தேதி ஆற்று திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், தமிழக பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்து தீர்த்தவாரி நடத்துவார்கள்.

இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் இடத்தில் அசம்பாவிதம் நடைபெறமால் தடுக்கவும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் வேண்டி இருப்பதால் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் காலி இடத்தை நிரப்ப வேண்டும் என்று பாகூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Next Story