கரூரில் சேவல் சண்டை நடத்தப்படுமா? அனுமதிகோரி இளைஞர்கள் மனிதசங்கலி போராட்டம்
கரூரில் சேவல் சண்டை நடத்த அனுமதிகோரி இளைஞர்கள் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்ட கிராமங்களில் நாட்டுசேவல் இனங்களை பாதுகாக்கும் பொருட்டு வீரவிளையாட்டாக சேவல் சண்டை நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட பூலாம் வலசுவில் நடைபெறும் சேவல் சண்டை போட்டி மிகவும் பிரபலம் ஆகும்.
இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உரிமையாளர்கள் தங்கள் சேவல்களை கொண்டு வந்து போட்டியில் கலந்து கொள்ள செய்வர். இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சேவல் சண்டை ஆர்வலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சேவல் சண்டை நடத்த உரிய அனுமதி வழங்கக்கோரி கரூர் மாவட்ட சேவற்கட்டு மீட்பு இயக்கம் சார்பில் நேற்று மாலை கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு இளைஞர்கள் பலர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு திண்டுக்கலை சேர்ந்த சேவற்கட்டு மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோஜ் தலைமை தாங்கினார். அப்போது தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டையும், நாட்டுசேவல் இனங்களை மீட்டெடுக்கவும், சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்ககோரி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின்போது சேவல்களை கையில் பிடித்து கொண்டும், சேவல் சண்டை பற்றிய பதாகைகளை கையில் பிடித்தபடியும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.