முதல்–அமைச்சர் மீது அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
முதல்–அமைச்சர் மீது அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
திருமங்கலம் நகர் பகுதியில் ஒரே நாளில் 15 ஆயிரத்து 932 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 பரிசு வழங்கப்பட்டது. இதற்கான விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த பொங்கல் பரிசு திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசு மக்களுக்கான பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. எத்தனையோ புயல்களை எல்லாம் தாண்டி வந்துவிட்டது. முதல்–அமைச்சர் 50 ஆண்டு கால பொதுவாழ்விற்கு சொந்தகாரர். நிதானமானவர். உழைப்பின் மீது நம்பிக்கை பெற்றவர். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசி பெற்றவர்.
மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றிருப்பதால், முதல்–அமைச்சர் மீது சிலர் கட்டுக்கதையை அவிழ்த்து விடுகின்றனர். சிலர் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர். இதுபோன்று அவதூறு பரப்புபவர்களை சட்டரீதியாக எதிர் கொண்டு சட்டத்தின் துணையோடு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.