திருவள்ளூரில் புதிய ஆன்லைன் சேவை அறிமுகம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
திருவள்ளூரில் காவல் முன்நடத்தை சரிபார்ப்பு என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கிவைத்தார்.
திருவள்ளூர்,
தமிழக போலீஸ் சார்பில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்பெற ஏதுவாக ‘காவல் முன்நடத்தை சரிபார்ப்பு’ என்ற புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இந்த புதிய ஆன்லைன் சேவை தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, புதிய ஆன்லைன் சேவையை தொடங்கி வைத்து, அதன் மூலம் வேலை சம்பந்தமாக விண்ணப்பித்தவர்களுக்கு சரிபார்ப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கூறியதாவது:-
தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் சரிபார்ப்பு போன்றவற்றை இந்த சேவையின் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக போலீசாரின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்த தனிநபர் ஏதேனும் குற்றநடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளாரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும்.
தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே இந்த சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன்நடத்தை சரிபார்ப்பு முடிக்கப்படும். இதற்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ் நிலையத்துக்கு நேரடியாக செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்த அறிக்கை நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த சேவை தொடர்பாக எழும் சந்தேகங்கள் மற்றும் அதற்கான பதில்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் என்ற பகுதியை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம்.
விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஏ.டி.எஸ்.பி. சிலம்பரசன், டி.எஸ்.பி.கங்காதரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story