பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 15 Jan 2019 4:15 AM IST (Updated: 14 Jan 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தை உள்ளது. இங்கு ஓசூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை கொண்டு வந்து நாள்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் நேற்று பீன்ஸ், மொச்சை, பூசணி, தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனையானது.

மேலும் பண்டிகையையொட்டி, அவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு வரை பீன்ஸ் 1 கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று கிலோ 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்பட்டது. ரூ. 25-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மொச்சை, நேற்று ரூ.60, 70 என விற்கப்பட்டது.

பூசணிக்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையி்ல், நேற்று ஒரு கிலோ 20 ரூபாய் என்று நிர்ணயித்து விற்கப்பட்டது. அதேபோல் தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் விலையும் கூடி விட்டன. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் உழவர் சந்தையில் 65 டன் காய்கறிகள், 2.5 டன் பழங்கள், விற்பனையானது.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விற்பனை 18 லட்ச ரூபாய் ஆகும். இந்தாண்டு ரூ. 22 லட்சம் அளவிற்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது. மேலும், 300 கிலோ மலர்கள் விற்பனையானது. நேற்று காலை முதல் மதியம் வரை உழவர் சந்தையில் விற்பனை, அமோகமாக நடைபெற்றது. 202 விவசாயிகள் உழவர் சந்தையில் கடைகளை அமைத்து, தங்கள் விளைபயிர்களை விற்பனைக்கு வைத்திருந்தனர்.

10 ஆயிரம் நுகர்வோர், இங்கு வந்து காய்கறி, பழங்கள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். உழவர் சந்தைக்கு பொதுமக்கள் அதிகளவில் வந்து சென்றதால், அந்த பகுதி மிகவும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலுடனும் காணப்பட்டது. ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் பண்டிகையையொட்டி, கரும்பு, பூக்கள், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் படு ஜோராக நடைபெற்றது. ஓசூர் பஸ் நிலையம் எதிரில் உள்ள பூ மார்க்கெட்டில் சாமந்தி, ரோஜா ஆகிய மலர்கள் அதிகளவில் விற்பனையானது. பூக்களின் விலையும் வழக்கத்தை விட, கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

Next Story