போடி அருகே பரபரப்பு: பால் வியாபாரி வீட்டில் 47 பவுன் நகைகள் திருட்டு
போடி அருகே, பால்வியாபாரி வீட்டில் 47 பவுன் நகை திருடு போனது.
போடி,
தேனி மாவட்டம் போடியை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகன் குருநாதன் (வயது 47). பால்வியாபாரி. இவர் கடந்த 12–ந்தேதி தனது குடும்பத்தினருடன் ராமேசுவரம் சென்றார். பின்னர் நேற்று காலை அவர்கள் மீனாட்சிபுரத்துக்கு திரும்பி வந்தனர். தொடர்ந்து வீட்டுக்கு சென்ற குருநாதன் கதவை திறக்க முயன்றார். ஆனால் திறக்கமுடியவில்லை. பின்னர் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்றார்.
அப்போது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதையும், வீட்டில் இருந்த 2 பீரோக்களில் ஒன்று உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதையும் பார்த்தார். உடனே பீரோவுக்குள் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை பார்த்தபோது அதில் இருந்த 47 பவுன் நகைகள் திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து போடி தாலுகா போலீசில் அவர் புகார் அளித்தார். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேனியில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் பீரோவில் பதிவான ரேகைகளை சேகரித்தனர்.
அதன் பின்னர் மோப்ப நாய் ‘லக்கி’ வரவழைக்கப்பட்டது. அது வீட்டுக்குள் சென்று மோப்பம் பிடித்துவிட்டு வெளியேறி சாலையில் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால் வியாபாரி வீட்டில் நகை திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.