இந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்


இந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 15 Jan 2019 4:30 AM IST (Updated: 15 Jan 2019 12:01 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த எம்.நடுப்பட்டியை சேர்ந்தவர் மணிக்காளை (வயது 40). இவர், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவராக உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சத்துணவு பணியாளர்கள் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் 50 பேரை மணிக்காளை பங்கேற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த இந்து முன்னணி மாவட்ட துணை தலைவரும், எம்.நடுபட்டியை சேர்ந்தவருமான ராமர் (35) என்பவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 50 பேருக்கும் அன்றைய தினம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் மணிக்காளை ஒரு புகார் மனு அளித்தார். அதில் முன்விரோதம் காரணமாக ராமர் தன்னை அவதூறாக பேசியதாகவும், அதனை கிராம மக்கள் 50 பேர் பார்த்துள்ளதாகவும் கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதையறிந்த எம்.நடுப்பட்டி பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் கன்னிவாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்ட ராமரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ராமரை ஜாமீனில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story