ஈரோடு பெட்ரோல் ‘பங்க்’கில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றவர் கைது
ஈரோடு பெட்ரோல் ‘பங்க்’கில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு பெருந்துறை ரோடு ஆசிரியர் காலனி பஸ் நிறுத்தம் அருகில் பெட்ரோல் ‘பங்க்’ செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் ‘பங்க்’குக்கு 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று வந்தார். பின்னர் அந்த நபர் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டை காண்பித்து ‘பங்க்’ காசாளரிடம் சில்லரை கேட்டுள்ளார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட காசாளர் தன்னுடைய பையில் இருந்து சில்லரையை எடுத்துள்ளார். அப்போது அந்த ரூபாய் நோட்டு சற்று வித்தியாசமாக தெரிந்ததால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. உடனடியாக கள்ள நோட்டுகள் சோதனை செய்யும் கருவியில் அந்த நோட்டை சோதனை செய்தார். அப்போது அது கள்ளநோட்டு என்பதை அவர் கண்டுபிடித்தார்.
இதைத்தொடர்ந்து பெட்ரோல் ‘பங்க்’ காசாளர், ஊழியர்களுடன் சேர்ந்து அந்த நபரை பிடித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஈரோடு பவளத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த சலாம் (வயது 47) என்பதும், அவரிடம் 4 ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 4 கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்து சலாமை கைது செய்தனர். மேலும் சலாமிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறும்போது, ‘சலாமிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் அனைத்தும் பிரிண்டிங் செய்யப்பட்டவை ஆகும். அதனால் அவரே கள்ள நோட்டுகளை பிரிண்டிங் செய்கிறாரா? அல்லது கள்ள நோட்டு கும்பலிடம் இருந்து அந்த நோட்டுகளை பெற்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.