மணல்மேடு பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மணல்மேடு பகுதியில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு,
மணல்மேடு, திருச்சிற்றம்பலம், கடலங்குடி, ஆத்தூர், கேசிங்கன், வக்காரமாரி, தலைஞாயிறு, சித்தமல்லி, வில்லியநல்லூர், தாழஞ்சேரி உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. மேற்கண்ட பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை பொதுமக்கள் வளர்த்து வருகின்றனர்.
இங்குள்ள கால்நடைகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருவதால் கால்நடை வளர்ப்போர் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:–
மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலான கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகள் நடக்க முடியாமலும், தீவனங்களை உட்கொள்ள முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றன. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், குளம்பு பிளவு ஆகிய இடங்களில் புண்கள் ஏற்பட்டு ஈ மற்றும் புழுக்கள் மொய்க்கின்றன.
2 நாட்கள் கவனிக்காமல் விட்டு, விட்டால் மாடுகள் இறக்கும் அபாயமும் உள்ளது. ஒரு கால்நடைக்கு நோய் வந்தால் மற்றொரு கால்நடைக்கு விரைவில் நோய் பரவி விடுகிறது. கோமாரி நோய் வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே கால்நடைகளுக்கு சிறந்தது. அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்குரிய சிகிச்சை அளித்தாலும் இயற்கை வைத்தியங்களாக சீரகம், வெந்தயம், மிளகு, பூண்டு, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றுடன் தேங்காயை துருவி கால்நடைகளுக்கு அவ்வப்போது கொடுத்து வருகிறோம்.
எங்களுக்கு விவசாயத்திற்கு அடுத்து வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருப்பது கால்நடைகள் தான். ஆனால், இந்த கால்நடைகள் தற்போது கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு தீவனம் உட்கொள்ளாமலும், மடிகளில் வீக்கம், கொப்பளங்கள் ஏற்பட்டும் இருப்பது வேதனையாக உள்ளது.
மேலும், மடிகளில் வீக்கம் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுவதால் பால் கறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பாலும் குறைந்துள்ளது. எனவே, மணல்மேடு பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குவதை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.