இன்று பொங்கல் திருநாள்: விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம் நாராயணசாமி வாழ்த்து செய்தி


இன்று பொங்கல் திருநாள்: விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க உறுதி ஏற்போம் நாராயணசாமி வாழ்த்து செய்தி
x
தினத்தந்தி 14 Jan 2019 11:45 PM GMT (Updated: 14 Jan 2019 8:22 PM GMT)

விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க நாம் இப்போதே உறுதியேற்க வேண்டும் என்று பொங்கல் வாழ்த்து செய்தியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுவதையொட்டி, புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:–

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்–அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

மார்கழி திங்கள் முடிந்து தைத்திங்கள் உதயமாகிறது. தமிழர்களுக்கு தை முதல் நாளான பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான திருநாளாகும். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற வள்ளுவர் பெருமானால் வாழ்த்தி உரைக்கப்பட்ட உழவர்களின் திருநாளாகவும் பொங்கல் விளங்குகிறது.

உலகின் அனைத்து சக்திகளுக்கும் ஆதார சக்தியாக சூரியன் விளங்குவதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுணர்ந்து படையலிட்டு, சூரிய உதயத்தின்போது நன்றி செலுத்தும் விழாவாகவும், தமிழர்களால் பெருமையுடன் இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. உழவுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் நாளாகவும் பொங்கல் திருநாள் விளங்குகிறது.

உழவர் அல்லாதவர்கள் நமக்கு சோறிடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும். விவசாயிகள் கடந்த சில வருடங்களாக சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களே இதற்கு சாட்சியாக உள்ளன. அவர்கள் வாழ்வில் ஒளியேற்றவும், பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் நாம் உறுதியேற்க வேண்டும். வடக்கே 3 மாநில விவசாயிகளின் துயர் துடைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற மாநில விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க நாம் இப்போதே உறுதியேற்க வேண்டும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நம் அரசின் சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற மக்களாட்சியின் எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இது விரைவில் மாறும். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

சபாநாயகர் வைத்திலிங்கம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

தமிழர்கள் நமக்கும் உதவும் சக மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கும் இயற்கைக்கும்கூட நன்றி தெரிவிப்பவர்களாக வாழ்ந்து வருகின்றோம். அந்த வகையில் உழவின்போது உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பயிர் வளர்வதற்கு உதவி புரியும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கவும் பொங்கல் திருநாளையும் கொண்டாடி வருகிறோம். பொங்கல் திருநாள் தமிழர்களின் கலாசாரமாகவும், மூச்சாகவும் உள்ளது என்றால் அது மிகையல்ல.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது கூற்று. அதன்படி பிறக்கும் தை மாதத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமின்றி அனைவரது வாழ்விலும் வழி பிறக்கவேண்டும் என்று பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உணவு பொருட்களை மண்பானையில் சூரியவெளிச்சம் படும் வகையில் வைத்து சமைத்து, வாழை இலையில் பரிமாறி உண்பதுதான் உடல் நலத்துக்கு சிறப்பானது என்பதையும் பொங்கல் பண்டிகை மூலம் நமது மூதாதையர்கள் வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் சாப்பிடுவதுதான் சிறந்தது என விஞ்ஞான உலகமும் ஒப்புக்கொண்டு வலியுறுத்தி வருகிறது. தமிழர்கள் மட்டுமின்றி புதுச்சேரி வாழ் மக்கள் அனைவரும் பொங்கல் தினத்தில் மட்டுமல்லாது நம்மால் முடிந்த தினங்கள் அனைத்திலும் மண் பானையில் சமைத்து உண்டு உடல் நலத்தை காத்துக்கொள்ளவும் உறுதியேற்போம்.

இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

அமைச்சர் கந்தசாமி விடுத்துள்ள செய்தியில், உழவுத்தொழிலின் இன்றியமையாத காரணிகளான கதிரவனையும், கால்நடைகளையும் நாம் நன்றியுடன் வணங்கும் நன்னாளாம் தைப்பொங்கல் திருநாளில் வாழ்வில் எல்லா வளமும் பெற வேண்டுகிறேன். புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்துடன் குதூகலித்து, எதிர்வரும் தலைமுறையும் நம் கலாசாரத்தினை பறைசாற்றும் வகையில், பண்பாடு மாறாவண்ணம் கொண்டாடி மகிழும் இப்பொங்கல் திருநாளில் விவசாய பெருமக்களை போற்றி புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உழவர் பெருமக்களின் கடின உழைப்பினால் விளைவித்த விளைபொருட்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டு, அவர்களோடு உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாளாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகிறோம்.

இந்த மகிழ்ச்சி அளிக்கும் இந்த பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று புதுச்சேரி மக்களின் வாழ்வு மேம்பட, நாடு வளம்பெற நல்வழி பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன். பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

இவ்வாறு ரங்கசாமி கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:–

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது நம்மிடம் உள்ள தீய எண்ணங்களையும், கெட்ட பழக்க வழக்கங்களையும், புற அழுக்கையும் மன அழுத்தத்தையும் போக்கி, துரோகத்தை அழித்து, தியாகத்தை போற்றி இந்த தமிழர் திருநாளை உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உழவுக்கும், உழவருக்கும் உற்ற துணையாக விளங்கும் மாடுகளை போற்றி, பூஜை செய்து, மாடுகளுக்கு பொங்கலிட்டு வணங்கி, வீரவிளையாட்டான ஏறு தழுவி, காளைகளை புண்படாமல் அடக்கி மகிழ்ந்து கொண்டாடுகிறோம்.

உலகில் எந்த நாகரிகத்திலும் இல்லாதவையான விவசாயத்தை பாதுகாத்தல், விவசாய விலங்குகளை போற்றுதல், பெரியவர்கள் சொற்படி நடத்தல் என்பது தமிழ் சமுதாய நாகரீகத்தில் மட்டுமே உரிய ஒன்றாகும். இவைகளை தான் நாம் ஆண்டுதோறும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று மகிழ்ந்து கொண்டாடி வருகிறோம். இந்நன்னாளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொங்கல் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் சஞ்சீவி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story