அதிகாரிகளை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்
அதிகாரிகளை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
புதுவையில் முக்கிய வீதிகளில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும், ஆட்டோ டிரைவர்களை அதிகாரிகள் குற்றவாளிகள்போல் நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 2 சக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதை தடுக்க வேண்டும், ஆட்டோ ஸ்டாண்டுகளுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) அறிவித்திருந்தனர். அதன்படி புதுவை பழைய பஸ் நிலையம் அருகே அவர்கள் ஆட்டோக்களுடன் கூடினார்கள்.
அங்கு ரோட்டில் அமர்ந்து போக்குவரத்து துறையினருக்கும் போலீசாருக்கும் எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்துக்கு ஆட்டோ சங்க தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் முருகன் கண்டன உரையாற்றினார்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் சூப்பிரண்டுகள் மாறன், ரங்கநாதன், ரக்சனாசிங், இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், முருகையன், செந்தில்குமார், தனசெல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொங்கல் பண்டிகை முடிந்ததும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து ஆட்டோ தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் அவர்கள் விலக்கிக்கொண்டனர்.