தானேயில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு : வாலிபர் கைது


தானேயில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு : வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2019 3:16 AM IST (Updated: 15 Jan 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

தானேயில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தானே, 

தானே வாக்ளே எஸ்டேட் லோக்மான்யா நகரில் வசித்து வருபவர்கள் அங்குள்ள தெருவோரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்தநிலையில் நேற்று அதிகாலை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களுக்கும் பரவியது.

இதனால் அந்த வாகனங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள், 4 ஆட்டோக்கள் தீயில் எரிந்து நாசமானது. யாரோ மர்ம ஆசாமிகள் அந்த வாகனங்களுக்கு தீ வைத்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையின் போது, வாகனங்களை தீ வைத்தது அதே பகுதியை சேர்ந்த அஜய்கும்பக்(வயது23) என்ற வாலிபர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, கீழ்க்கண்ட தகவல்கள் தெரியவந்தன. அஜய் கும்பக்கின் தந்தை அண்மையில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி உள்ளார். ஆனால் அந்த மோட்டார் சைக்கிளுக்கான தவணை தொகையை அவரது உறவினர் ஒருவர் செலுத்தி வந்தார். எனவே அந்த மோட்டார் சைக்கிளையும் அவர் தான் ஓட்டிவந்தார். இது அஜய் கும்பக்கிற்கு கோபத்தை உண்டாக்கியது. அவரிடம் சென்று மோட்டார் சைக்கிளை தரும்படி சண்டையிட்டார். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளை கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜய் கும்பக் நேற்று அதிகாலையில் அங்கு சென்று அந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார். இதில், தீ கொழுந்துவிட்டு எரிந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது.

Next Story