பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு தூத்துக்குடி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்


பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு தூத்துக்குடி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 15 Jan 2019 3:58 AM IST (Updated: 15 Jan 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடி,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று முன்தினம் முதல் தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் மார்க்கெட் அருகே உள்ள ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்கள் மாற்றுவழியில் இயக்கப்பட்டன. கிராமப்புறங்களில் விளைந்த காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து குவித்து உள்ளனர்.

நேற்றும் பொங்கல் பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக தூத்துக்குடி மார்க்கெட்டு மற்றும் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தூத்துக்குடி மார்க்கெட் வந்து, தங்களுக்கு தேவையான காய்கறிகள், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர். தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.60-க்கும், தக்காளி ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.25, கேரட் ரூ.30, மாங்காய் ரூ.100, பீன்ஸ் ரூ.75, முட்டைகோஸ் ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.40, சேப்பங்கிழங்கு ரூ.60, மிளகாய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.150, சீனிஅவரைக்காய் ரூ.85, அவரைக்காய் ரூ.60, பூசணிக்காய் ரூ.25, வெண்டைக்காய் ரூ.60, பல்லாரி ரூ.20, சிறிய வெங்காயம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதே போன்று பூக்களின் விலையும் அதிகரித்து உள்ளது. பூமார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.120, சம்பங்கி ரூ.150, ரோஜா ரூ.150, வாடாமல்லி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

Next Story