குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2019 4:58 AM IST (Updated: 15 Jan 2019 4:58 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் நகராட்சி, மணியன்குட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அரியலூர்- மணியன்குட்டை சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள், அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு விரைவில் சரி செய்யப்பட்டு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரியலூர்- மணியன்குட்டை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

Next Story