சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை : பரமேஸ்வர் பேட்டி


சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை : பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 15 Jan 2019 12:08 AM GMT (Updated: 15 Jan 2019 12:09 AM GMT)

சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று துணை முதல்- மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12-க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மந்திரிகளுடன் நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வா் ஆலோசனை நடத்தினார். மேலும் அவர்களுக்கு விருந்தும் கொடுத்தார்.

அப்போது பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரைக்கு பதிலடி கொடுக்கவும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்கவும், அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். இதனால் ஆதங்கப்பட வேண்டிய அவசியமில்லை. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுக்க முயற்சிப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. கூட்டணி அரசுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக பா.ஜனதாவினர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

சில எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் தலைவர்களின் தொடர்பில் இல்லாமல் உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக வெளிவரும் தகவல்கள் உண்மையல்ல. அவர்கள் அமித்ஷாவை சந்திக்கவில்லை. சில எம்.எல்.ஏ.க்கள் சொந்த காரணங்களுக்காகவும், அரசியல் தலைவர்களை சந்திக்கவும் மும்பை, டெல்லிக்கு சென்றுள்ளனர். எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசை விட்டு விலக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உமேஷ் ஜாதவ் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேரப்போவதாக, அவரது சகோதரர் சொல்லி இருக்கிறார். ஆனால் உமேஷ் ஜாதவ் இதுவரை காங்கிரசை விட்டு விலகப்போவதாக சொல்லவில்லை. அவர் காங்கிரசில் இருந்து விலக மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று (அதாவது நேற்று) நடந்த கூட்டத்தில் அடுத்த மாதம்(பிப்ரவரி) தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் குறித்து மந்திரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பட்ஜெட்டில் எந்த திட்டங்களை புதிதாக சேர்க்கலாம், தங்களது தொகுதிகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்து தங்களது கருத்துகளை மந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பது குறித்தும் மந்திரிகள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர். அதுபற்றி முதல்-மந்திரி குமாரசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். பட்ஜெட்டில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து முக்கிய அறிவிப்பை குமாரசாமி வெளியிட உள்ளார். விவசாய கடன் தள்ளுபடிக்கு ஏற்கனவே இரு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story