பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம்


பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:00 PM GMT (Updated: 16 Jan 2019 2:50 PM GMT)

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விழா ஆகியவை நாகர்கோவிலில் நேற்று நடந்தது. விழாவுக்கு பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் கருங்கல் ஜார்ஜ், ராஜதுரை, மாவட்ட துணை தலைவர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் நாராயண ராஜா, பொருளாளர் ஜேம்ஸ் மார்‌ஷல் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். செயல் ஆலோசகர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிரேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன் சிறப்புரையாற்றினார். முடிவில் பேரவை இணைச்செயலாளர் சிவதாணு நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் 40 ஆண்டுகளாக ஓய்வறியாது வணிகர்களின் உரிமைக்காக இரவும், பகலும் பணியாற்றி செயல்பட்டு வரும் வெள்ளையனுக்கு குமரி மாவட்ட பேரவை சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வது, செட்டிக்குளம், கோட்டார், வடசேரி, தக்கலை போன்ற இடங்களில் வணிக பகுதிகளை அழித்தொழிக்கின்ற இரும்பு பாலத்தை அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துக் கொள்வது.

பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் பிளாஸ்டிக்குக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாத நிலையில் வியாபாரிகளை அச்சுறுத்தும் வகையில் அபராதம், வழக்குகள் எடுக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். பிளாஸ்டிக்குக்கு மாற்று வழியை ஏற்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும், வணிகர்கள் அந்நிய பொருட்களை வாங்கவும், விற்கவும் வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது, களியக்காவிளை பகுதியில் பஸ் நிலைய விரிவாக்கம் செய்யும் போது அருகில் செயல்பட்டுவரும் சந்தைக்கு மாற்று இடம் மற்றும் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story