ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 5:16 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்காரவாசலில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராமத்தில் இருந்து நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் உள்பட பல்வேறு கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அனுசரித்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முடிவெடுத்தனர். அதன்படி நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கோமல் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி கருப்புக்கொடி ஏற்றினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், மாவட்டகுழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் மாதவன், பவுன்ராஜ், ராஜாங்கம், ஜெயபால், ரகுபதி, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது டெல்டா மாவட்டங்களின் விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க குழாய் பதித்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே விவசாயத்தை அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல திருக்காரவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசியல் கட்சிகள் விவசாய அமைப்புகள் பங்கேற்கும் சைக்கிள் ஊர்வலம் திருக்காரவாசலில் இருந்து புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை செல்கிறது. 22–ந் தேதி திருக்காரவாசலில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story