ஊத்துக்கோட்டை அருகே ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது மராட்டிய போலீசார் அதிரடி


ஊத்துக்கோட்டை அருகே ரூ.2 ஆயிரம் கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது மராட்டிய போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:15 PM GMT (Updated: 16 Jan 2019 7:53 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே கலர் பிரிண்டர் கருவி மூலம் கள்ள நோட்டுகள் அச்சடித்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் கள்ள நோட்டுகளை மராட்டிய போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

மராட்டிய மாநிலத்தின், புனே நகர போலீசார் கடந்த 8 மற்றும் 12–ந் தேதிகளில் ரூ.2 ஆயிரம், ரூ.500 கள்ள நோட்டுகளை அச்சடித்த 4 பேரை புனே நகரில் செய்து செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிப்பட்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் 4–வது தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 44) என்பவர் கலர் பிரிண்டர் மூலம் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக அந்த கும்பல் போலீசிடம் தெரிவித்தது.

அதன்பேரில் வெங்கடேசனை பிடிக்க புனே மாநகர துணை போலீஸ் கண்காணிப்பாளர் டெங்காலி தலைமையில் 6 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் பொன்னேரி வந்தது. ஆனால் கள்ளநோட்டு கும்பல் தெரிவித்த முகவரியில் இருந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதனால் போலீசார் புனேயில் பிடிப்பட்ட கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த ஒருவனின் செல்போன் சிம்கார்டு மூலம் வெங்கடேசனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அந்த போன் டவரின் சிக்னல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெய்வேலி ஐடியல் சிட்டி பகுதியை காட்டியது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் வெங்கடேசன் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருவதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் மராட்டிய போலீசார் அந்த வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினர். இதையடுத்து வெளியே வந்த வெங்கடேசன் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

வீட்டில் இருந்த கள்ள நோட்டுகள் அடிக்க பயன்படுத்திய கலர் பிரிண்டர் கருவி, டை மற்றும் இதர பொருட்களையும் கைப்பற்றினர். மேலும் ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

வெங்கடேசன் பற்றி புனே நகர துணை போலீஸ் கண்காணிப்பாளர் டெங்காலி பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் புனேயில் பணிபுரிந்தபோது அங்கேயே தங்கி விட்டார். இதனால் அவருடைய குடும்பம் புனேவுக்கு இடம் பெயர்ந்தது. சுமார் 24 வருடங்களுக்கு முன் வெங்கடேசன் சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். இதில் போதிய வருமானம் கிடைக்காததால் அங்குள்ள திருட்டு கும்பலிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிலிருந்து அவரின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.

20 வருடங்களுக்கு முன் வெங்கடேசன் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் வேலையில் இறங்கினார். இதை அங்குள்ள ஒரு நபர் போலீசிடம் போட்டுக் கொடுத்ததை தொடர்ந்து வெங்கடேசன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அவரை கொலை செய்தனர். இந்த வழக்கில் வெங்கடேசன் 20 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய போலீசார் வெங்கடேசனை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் புனேவுக்கு அழைத்துச் சென்றனர்.


Next Story