மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு தபால்கள் அனுப்பிய விவசாயிகள்


மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு தபால்கள் அனுப்பிய விவசாயிகள்
x
தினத்தந்தி 17 Jan 2019 3:45 AM IST (Updated: 17 Jan 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பிரதமருக்கு தபால்கள் அனுப்பினர்.

கரூர்,

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், தமிழக விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. மேலும் அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், குடிநீருக்கும் போதிய தண்ணீர் கிடைக்காது. எனவே அந்த அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவனை அமைப்பது தொடர்பாக மதுரையில் நடைபெற உள்ள விழாவில் பங்கேற்க வருகிற 27-ந்தேதி அன்று பிரதமர் மோடி வர இருக்கிறார்.

இதையொட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கோரிக்கையினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அது தொடர்பாக 1 லட்சம் தபால் கார்டுகளை புதுடெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பும் வகையிலான நூதன போராட்டத்தை கரூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காவிரி பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மகாதானபுரம் ராஜாராம், திருச்சி மாவட்ட தலைவர் பாலுதீட்சிதர், பொது செயலாளர் காந்தி பித்தன் உள்பட விவசாயிகள் பலர் நேற்று கரூர் ஜவகர்பஜாரிலுள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு எழுதிய தபாலினை தபால் பெட்டியில் போட்டு சென்றனர். மேலும் இதைவலியுறுத்தி அனுப்பிய தபால் பதிவுகளுக்கு கட்டாயம் பதில் அளிப்பதோடு பிரதமர் தமிழக விவசாயிகள் நலனை காக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.


Next Story