அரியாங்குப்பத்தில் அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 10 பவுன் தங்க நகை திருட்டு
அரியாங்குப்பத்தில் பொதுப்பணித்துறை ஊழியர் வீட்டில் புகுந்து யாரோ மர்ம நபர்கள் 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டனர்.
அரியாங்குப்பம்,
அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54). இவர் புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய தம்பி பூபாலன் மகள் திருமணத்துக்காக 10 பவுன் தங்க நகையை செல்வராஜிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் குடும்பத்தினர் திருமணத்துக்காக பாத்திரங்கள் வாங்க தஞ்சாவூர் சென்றனர். மறுநாள் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை திருடிச் செல்லப்பட்டு இருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து செல்வராஜ் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்றவர்களை தேடி வருகிறார்கள்.