ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி


ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 16 Jan 2019 11:30 PM GMT (Updated: 16 Jan 2019 11:30 PM GMT)

ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலியானார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சின்னாரன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரப்பா(வயது 48). தொழிலாளி. இவருக்கு யசோதா என்ற மனைவியும், 4 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரப்பா பாகலூர் செல்வதற்காக சின்னாரன்தொட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்திரப்பா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்த யானை அவரை விடாமல் துரத்தியது. பின்னர் அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது.

இதில் படுகாயம் அடைந்த சந்திரப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதற்கிடையே சந்திரப்பா பிணமாக கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பேரிகை போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்திரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. முருகன், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, சந்திரப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பொங்கல் பண்டிகையன்று காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story