நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது


நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2019 11:50 PM GMT (Updated: 16 Jan 2019 11:50 PM GMT)

நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 37 பவுன் நகைகளை மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி அருகே உள்ள சிங்களாந்தபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது50). விவசாயி. இவரது வீட்டில் கடந்த 2-ந் தேதி மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகளை திருடி சென்றனர். கடந்த மாதம் 21-ந் தேதி நாமக்கல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவேட்டிபட்டி மகரிஷி நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 6 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.

இதேபோல் கடந்த மாதம் 26-ந் தேதி பரமத்தி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளாளபாளையம் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகளும், 27-ந் தேதி படமுடிபாளையம், ஜெ.ஜெ.நகரில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளையும் மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பரமத்திவேலூர் காவிரி பாலம் சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக கரூர் பக்கம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த துரைசாமி (வயது38), சோமு (என்கிற) சோம சுந்தரம், (28), மதுரை கே.புதூர் சம்பாகுளம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (30) என்பது தெரியவந்தது.

மேலும் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சிங்களாந்தபுரம் காந்திநகரில் உள்ள விவசாயி தங்கவேல், பரமத்தி வேலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் ரவி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நடராஜன் உள்பட 4 பேரின் வீடுகளில் பூட்டுகளை உடைத்து நகை, பணத்தை திருடி இருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கொலை மற்றும் 10-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன 37 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டு வழக்கில் துப்பு துலக்கி 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.


Next Story