சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று ரூ.9.67 கோடிக்கு மது விற்பனை


சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று ரூ.9.67 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 17 Jan 2019 5:34 AM IST (Updated: 17 Jan 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையன்று ரூ.9 கோடியே 67 லட்சத்து 92 ஆயிரத்து 10-க்கு மது விற்பனையானது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 204 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 54 கடைகளில் மட்டுமே பார் வசதி உள்ளன. புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடைபெறும்.

கடந்த 14-ந் தேதி போகிபண்டிகை, நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி விற்பனை அமோகமாக இருக்கும் என்ற காரணத்தினால் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முன்னதாகவே தேவையான மது பாட்டில்கள் அனுப்பி வைத்து இருப்பு வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையன்று கூடுதலாக மது பாட்டில்கள் விற்பனை ஆனது.

இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை கூடுதலாக இருந்தது. பொங்கல் அன்று மட்டும் ரூ.9 கோடியே 67 லட்சத்து 92 ஆயிரத்து 10-க்கு மது விற்பனை செய்யப்பட்டது. 7,358 பீர் பெட்டிகளும், 16,127 பிராந்தி பெட்டிகளும் விற்பனை ஆனது. பீர் விற்பனை கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல் போகி பண்டிகையன்று ரூ.6 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 540-க்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில் 4,718 பீர் பெட்டிகளும், 11,072 பிராந்தி பெட்டிகளும் விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story