சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் திறப்புவிழா: ‘எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து மக்களுக்கு அரசு சேவை செய்யும்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் திறப்புவிழா: ‘எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்து மக்களுக்கு அரசு சேவை செய்யும்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2019 12:27 AM GMT (Updated: 17 Jan 2019 12:27 AM GMT)

‘எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்து மக்களுக்கு இந்த அரசு சேவை செய்யும்’ என்று சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு அவர்களது முழு உருவச்சிலைகளுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என்று 30.9.2017 அன்று சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, சேலம் அண்ணா பூங்காவில் மணிமண்டபம் அமைப்பதற்கான பணிகளை 29.4.2018 அன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ரூ.80 லட்சத்தில் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது முழு உருவச்சிலைகளுடன் கூடிய மணி மண்டபம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடைந்தன.

இந்தநிலையில், சேலம் அண்ணா பூங்காவில் தமிழக அரசு சார்பில் முதன்முறையாக, ரூ.80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச்சிலைகளுடன் கூடிய மணி மண்டபம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார். அமைச்சர்கள் சரோஜா, ஆர்.பி.உதயகுமார், பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாஜலம், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து, மாநில கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் இளங்கோவன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நினைவு மணி மண்டபத்தையும், அவர்களது வெண்கல முழு உருவச்சிலைகளையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் இரண்டு சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் மணி மண்டபத்தையும், அவர்களது உருவச் சிலைகளையும் திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு இருபெரும் தலைவர்களும் உருவான காரணத்தினால் தான், இந்த நாடு செழித்து, வளம்பெற்று, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. கிராமத்திலிருந்து நகரம் வரை இன்றைக்கு பொருளாதாரமானாலும் சரி, கல்வியானாலும் சரி, மருத்துவமானாலும் சரி, அனைத்திலும் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையாக விளங்குவதற்கு இருபெரும் தலைவர்கள் உழைத்து, தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள்.

குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு உழைத்து, மறைந்த ஒப்பற்ற தலைவர்கள் இந்த இருபெரும் தலைவர்கள். இந்த நாட்டிலேயும் சரி, தமிழகத்திலேயும் சரி எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருப்பார்கள். ஆனால், பேரறிஞர் அண்ணாவுடைய வாரிசாக இரவு, பகல் பாராமல் மக்களுக்காக உழைத்து, தனக்கென்று குடும்பம் இல்லாமல், குடும்பம் என்று சொன்னால், மக்கள் தான் தன் குடும்பம் என்று வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது மணிமண்டபம், இருபெரும் தலைவர்களுடைய முழு உருவ வெண்கலச் சிலை திறப்பதை நான் இறைவன் கொடுத்த பாக்கியமாக கருதுகின்றேன்.

நாம் இறைவனை கண்ணிலே பார்த்தது கிடையாது. இறைவன் தோற்றத்திலே, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இருபெரும் தலைவர்களின் திருவுருவச் சிலைகளையும் சேலம் மாநகரத்தினுடைய மையப் பகுதியிலே அமைத்து, நம் அத்தனை பேருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது தமிழக அரசு. எத்தனையோ தலைவர்கள் தோன்றுவார்கள், வாழ்வார்கள், மறைவார்கள். ஆனால், இடைபட்ட காலத்திலே நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்பது அவர்கள் வாழ்ந்த கால சரித்திரம் சொல்லும்.

அந்த சரித்திரத்தை இரு பெரும் தலைவர்கள் வாழ்ந்த காலத்திலேயே படைத்துவிட்டு சென்றிருக்கின்றார்கள். அவர்களுடைய திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டமுள்ள திட்டங்கள். எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் இந்த பூமியிலே அவர்கள் அறிவித்த அத்தனை திட்டங்களும் அவர்களுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்.

ஆகவே ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமத்திலே வாழ்கின்ற விவசாயி, விவசாயத் தொழிலாளி, நகரத்திலே வாழ்கின்ற ஏழை, எளிய அத்தனை பேரையும் வாழவைத்த தெய்வங்களுக்கு இன்று ஒட்டுமொத்த மக்களின் சார்பாக அவர்களுக்கு புகழ் மற்றும் பெருமை சேர்க்கின்ற விதமாக, அவர்களுக்கு மணிமண்டபத்தை அமைத்து அவர்களுடைய முழு உருவச் சிலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த அரசு, இன்றைக்கு இப்படி புகழ் பெற்றவர்களுக்கு பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கின்றோம். அவர்கள் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கின்ற விதத்திலே அவர்களுக்கு திருவுருவச் சிலையையும், மணிமண்டபத்தையும் அமைத்திருக்கின்றோம், அரசு விழாவாகவும் கொண்டாடுகின்றோம். அந்த வகையிலே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னையிலே மணிமண்டபம், திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கரூரில் முன்னாள் அமைச்சர், இந்த நாட்டு மக்களுக்காக உழைத்தவர், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த ராமசாமி படையாச்சியாருக்கு ரூ.2.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அறிவிக்கப்பட்டு, அவருடைய பிறந்தநாளை அரசுவிழாவாக எடுக்கப்படும். அதுமட்டுமல்ல, அவர் வாழ்ந்த காலத்திலே, நாட்டுமக்களுக்கு செய்த எண்ணற்ற சேவைக்கு பெருமை சேர்க்கின்ற விதத்திலே, அவருக்கு சட்டமன்றத்திலே அவருடைய முழு உருவப்படம் திறக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றோம், அதுவும் திறக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசைமேதை நல்லப்ப சாமிக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நினைவுச்சின்னம். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ரூ.1½ கோடியில் பாரத மாதா நினைவாலயம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், புலித்தேவனுக்கு அரசின் சார்பிலே விழா. இப்படி, நாட்டுக்காக உழைத்தவர்கள், மக்களுக்காக உழைத்து, மறைந்த மாபெரும் தலைவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதத்தில் தமிழக அரசால் இவையெல்லாம் அறிவிக்கப்பட்டு பெருமை சேர்த்திருக்கின்றது.

டாக்டர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் விட்டுச் சென்ற பணிகள் தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும். எத்தனை தடைகள் வந்தாலும், எவ்வளவு இன்னல்கள் வந்தாலும், எவ்வளவு இழிச்சொல்லுக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளானாலும், அத்தனையையும் தகர்த்தெறிந்து, உங்கள் துணையோடு, இருபெரும் தலைவர்களுடைய ஆசியோடு, அரசு தொடர்ந்து பாடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் ஜான் கென்னடி, பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, தியாகராஜன், சரவணன், கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.துரைராஜ், சுந்தரபாண்டியன், ராமராஜ், செல்வராஜ், பெரியபுதூர் கண்ணன், சி.கர்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் அசோக்குமார், மாமாங்கம் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்டி, தொட்டியெங்கும் போற்றப்படும் ‘தினத்தந்தி’: பா.சிவந்திஆதித்தனாருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு

மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இன்றைக்கு நாடு முழுவதும் போற்றப்படுகின்ற, பட்டி, தொட்டி அத்தனை இடங்களிலும் இன்றைக்கு பத்திரிகை என்று சொன்னால், “தினத்தந்தி” பத்திரிகை தான் அனைத்து மக்களுக்கும் நினைவிற்கு வரும். அப்படி புகழ்பெற்ற “தினத்தந்தி” பத்திரிகையின் அதிபரான டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் மற்றும் திருவுருவச்சிலையை நிறுவ இருக்கிறோம், என்றார்.

சேலம்-ஓமலூர் சாலைக்கு ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாநகரில் மிக முக்கியமான சாலையாக சேலம்-ஓமலூர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரம் தான் அண்ணா பூங்கா அமைந்துள்ளது. தற்போது அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணி மண்டபமும், அவர்களது முழு உருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இந்த ஓமலூர் மெயின்ரோட்டிற்கு ‘பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை’ என்று பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதைத்தொடர்ந்து சேலம் பன்னீர்செல்வம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12 லட்சம் செலவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் முதன்முதலாக அரசு சார்பில், சேலம் அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் ஜெயலலிதா முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அரசு விழாவாக இந்த மணிமண்டபத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப் படும் என்று அறிவித்தார். அந்தவகையில், இந்த மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது.


Next Story