தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 18 Jan 2019 5:44 AM IST (Updated: 18 Jan 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது அருகே உள்ள திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை பிரிவுகள் உள்ளதால், இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏராளமானோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மருத்துவமனைக்கு 4 இடங்களில் நுழைவு வாசல்கள் உள்ளன. இதில் முதல் வாசல் வழியாக மருத்துவக்கல்லூரிக்கும், மருத்துவமனைக்கும் செல்லலாம். 2 மற்றும் 4-வது நுழைவு வாசல் வழியாக பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த வழியாகத்தான் அவசர சிகிச்சை பிரிவுக்கும் செல்ல வேண்டும். 3-வது நுழைவு வாசல் வழியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லலாம்.

2-வது நுழைவு வாசல் வழியாக பஸ்கள் உள்ளே சென்று 4-வது வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். இதனால் 2-வது நுழைவுவாசலை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாசல் வழியாக சென்று அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வளைவு பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி, சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துர்நாற்றம் வீசுகிறது. இது பொதுமக்களை மிகவும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது. பாதாள சாக்கடை குழாய் உடைப்பு திறந்த நிலையில் இருப்பதால், அசம்பாவிதங்கள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பாதாள சாக்கடை உடைப்பு வழியாக வெளியேறும் கழிவு நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. நோய்களை கட்டுப்படுத்த வேண்டிய மருத்துவமனையின் வளாகத்திலேயே நோய்களை பரப்பும் விதமாக கழிவு நீர் தேங்கி நிற்பது பொதுமக்களை வேதனை அடைய செய்துள்ளது. தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story