ஒரு தலை காதலால் பள்ளி மாணவிக்கு அரிவாள் வெட்டு திருமணமான வாலிபருக்கு வலைவீச்சு


ஒரு தலை காதலால் பள்ளி மாணவிக்கு அரிவாள் வெட்டு திருமணமான வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Jan 2019 4:00 AM IST (Updated: 18 Jan 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

காசிமேட்டில் ஒருதலை காதலால் பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய திருமணமான வாலிபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் 1-வது தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவருடைய மகள் ரக்சிதா(வயது 15). இவர், அருகில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு மாணவி ரக்சிதாவை ராயபுரம் ஜி.எம்.பேட்டை பகுதியில் வசித்து வரும் மதன்(23), அவருடைய நண்பர் சிவா(24) ஆகியோர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் மாணவி ரக்சிதாவுக்கு இடது தோள் பட்டையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சம்பவம் குறித்து மாணவி ரக்சிதா, காசிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், “எங்கள் வீட்டுக்கு எதிரே வசித்து வரும் மதன் மற்றும் அவருடைய நண்பர் சிவா ஆகியோர் என்னை பாலியல் ரீதியாக பேசி, அரிவாளால் வெட்டியதாக” கூறி இருந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதும், தற்போது மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும் தெரிந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் தனது நண்பருடன் சேர்ந்து மாணவியை அரிவாளால் வெட்டியதும் தெரிந்தது. தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் மாணவிக்கு ஆதரவாக அவரது உறவினரான தீபக்(28) என்பவர் மதன் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட் களை அடித்து நொறுக்கினார். இதுபற்றி மதனின் உறவினர்கள் காசிமேடு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உறவினரான தீபக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story