பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா 7 கிராம சாமி சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு


பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா 7 கிராம சாமி சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 19 Jan 2019 3:15 AM IST (Updated: 18 Jan 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் நடந்த பாரிவேட்டை திருவிழாவில் 7 கிராம சாமி சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

திருவள்ளூர்,

காணும் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் பேரம்பாக்கத்தில் பாரிவேட்டை திருவிழா நடை பெறுவது வழக்கம். இந்த திருவிழா கிராம மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பேரம்பாக்கத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் அருகே உள்ள திடலில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது.

இதில் பேரம்பாக்கம் காமாட்சியம்மன் சமேத சோளஸ்வரர், பாலமுருகன், காசிவிஸ்வ நாதர், களாம்பாக்கத்தில் இருந்து மரகதவல்லி சமேத திருநாகேஸ்வரர், நரசிங்கபுரத்தில் இருந்து திருவேங்கட நரசிம்மர், முருகர், மாரிமங்கலத்தில் இருந்து ராமலிங்க அடிகளார், சிவமாரி நாராயணி, பட்டு முடையார்குப்பத்தில் இருந்து கங்கையம் மன், பழைய கேசாவரம் லட்சுமிதேவி, சிவபுரம் குறுந்தவிநாயகர் என சுற்றுவட்டார 7 கிராமங்களில் இருந்து 11 சாமி சிலைகள் டிராக்டரில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே வரிசையில் நின்று முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பாரிவேட்டை திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைத்து சாமி சிலைகளும் பேரம்பாக்கம் பஜாரில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்த பாரிவேட்டை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேரம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.டி.இ.சந்திரசேகர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Next Story