கோத்தகிரி அருகே மாஜிஸ்திரேட்டு சென்ற காரை வழிமறித்து தகராறு; 6 பேர் கைது
கோத்தகிரி அருகே மாஜிஸ்திரேட்டு சென்ற காரை வழிமறித்து தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டரான அவரது மனைவி ஆகியோர் தங்களது மகனுடன் நேற்று முன்தினம் மாலை கோத்தகிரி வந்தனர். அங்கு உள்ள தனியார் பள்ளியில் தங்களது மகனை விட்டு விட்டு பந்தலூர் திரும்பி கொண்டிருந்தனர். காரை பந்தலூர் நீதிமன்ற அலுவலக உதவியாளர் குன்னூர் இளித்தொரை கிராமத்தை சேர்ந்த வினோத் கண்ணா (வயது 28) என்பவர் ஓட்டி சென்றார்.
கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் 3 பேர் ஹாரன் அடித்துக்கொண்டே காரை முந்தி செல்ல முயன்றனர். அது மலைப்பாதை என்பதால் வழிவிடுவதில் கார் டிரைவருக்கு சிரமம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் காரை முந்திசென்ற அந்த இளைஞர்கள் காரின் முன்பு தங்களது மோட்டார் சைக்கிளை குறுக்காக நிறுத்தி ஹாரன் அடித்தால் காது கேட்காதா?. எப்படியும் பாக்யா நகரை கடந்து தானே நீங்கள் செல்ல வேண்டும். அங்கு வரும்போது பார்த்து கொள்கிறோம் என்று கூறி விட்டு சென்று உள்ளனர். இந்தநிலையில், கட்டபெட்டு பகுதியில் இருந்து பாக்யா நகர் பகுதிக்கு கார் சென்றபோது ஏற்கனவே தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அவர்களது நண்பர்கள் சிலருடன் மாஜிஸ்திரேட்டு வந்த காரை வழிமறித்து தகராறு செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் வினோத் கண்ணா, தகராறில் ஈடுபட்ட இளைஞர்களிடம் காரில் பந்தலூர் மாஜிஸ்திரேட்டு மற்றும் அவரது மனைவியான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் உள்ளனர். எனவே வழிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு அவர்கள் சாலை அனைவருக்கும் சொந்தம் என்று கூறி தரக்குறைவான வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. மேலும், காரை எடுத்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து வினோத் கண்ணா கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட கோத்தகிரி சப்–இன்ஸ்பெக்டர்கள் மார்ட்டின் லூதர், அலெக்சாண்டர், நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாஜிஸ்திரேட்டு சென்ற காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டவர்கள் கட்டபெட்டு பாக்யா நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (21), சரவணன் (36), லட்சுமணன் (23), பிரகாஷ் (45), கோபிநாதன் (27) துரைராஜ் (58) என்பதும் அவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஊட்டி மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.