வாழப்பாடி அருகே ‘வங்கா நரி’ பொங்கல் விழா நடத்த முயன்ற 10 பேருக்கு அபராதம்


வாழப்பாடி அருகே ‘வங்கா நரி’ பொங்கல் விழா நடத்த முயன்ற 10 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 19 Jan 2019 4:45 AM IST (Updated: 19 Jan 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடி அருகே ‘வங்கா நரி’ பொங்கல் விழா நடத்த முயன்றனர். இது தொடர்பாக 10 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம், ரெங்கனூர் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் ‘வங்கா நரி’யை பிடித்து வந்து, ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது.

கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதி, தரிசுநிலப்பகுதிக்கு செல்லும் கிராம மக்கள், வலையை விரித்து காத்திருந்து வங்கா நரியை பிடித்து, மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கிராமத்திற்கு கொண்டு வருவார்கள். பின்னர் அந்த நரியின் காலில் கயிற்றை கட்டி சிறிது நேரம், ஜல்லிக்கட்டு போன்று ஓடவிட்ட பிறகு பொங்கல் பண்டிகையை நிறைவு செய்கின்றனர். தை மாதத்தில் அறுவடைக்கு பின்னர், மீண்டும் பயிர் செய்வதற்கு முன், ‘நரி’ முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என, இப்பகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதனாலேயே ஆண்டுதோறும் ‘வங்கா நரி’ பொங்கல் விழா கொண்டாடி வருகிறார்கள்.

வங்கா நரிகள் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளதால், அவற்றை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. அதையும் மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் விழா நடத்துவது தெரியவந்தால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று எச்சரிக்கை விடுத்து, வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கினார்கள்.

300 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ‘வங்கா நரி’ பொங்கல் விழாவை நிறுத்த கிராம மக்கள் விரும்பவில்லை. இதையடுத்து வாழப்பாடி அருகே உள்ள சின்னமநாயக்கன்பாளையம் ஊர் வழக்கப்படி பாரம்பரிய விழாவை கொண்டாட, வங்கா நரியை பிடிப்பதற்காக வலைகளுடன் கிராம மக்கள் அருகிலுள்ள தரிசுநிலங்களில் முகாமிட்டனர். நேற்று காலை கொட்டவாடி பகுதியில் வலையில் வங்கா நரி பிடிபட்டதால், மிகுந்த ஆரவாரத்தோடு அதனை கிராமத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்றனர்.

இதையறிந்து அங்கு வந்த வனத்துறையினர் வங்கா நரியை மீட்டு சேசஞ்சாவடி வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் வன உயிர் பாதுகாப்பு அலுவலர் பிரபா தலைமையிலான வனத்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து வனத்துறையின் தடையை மீறி வங்கா நரியை பிடித்து பொங்கல் விழா நடத்த முயன்ற சின்னமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 47), கந்தன் (32), முனுசாமி (37), நாராயணன் (35), ஏழுமலை (30), மாரிமுத்து (41), ஆறுமுகம் (39), பெரியசாமி (41), ரங்கசாமி (35), மகாலிங்கம் (43) ஆகிய 10 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story