பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரியில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகம்


பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரியில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை - கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகம்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:33 PM GMT (Updated: 18 Jan 2019 10:33 PM GMT)

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.67¼ லட்சம் அதிகமாகும்.

நாகர்கோவில்,

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2½ கோடி முதல் ரூ.2¾ கோடி வரை மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்கள் போன்ற விழா காலங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவு மது விற்பனை நடைபெறும்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி போகிப்பண்டிகை கடந்த 14-ந் தேதியும், பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப்பொங்கலும், 17-ந் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக இந்த ஆண்டு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. போகிப்பண்டிகைக்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் விடுமுறை தினமாகும்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகை விற்பனை கடந்த 13-ந் தேதியில் இருந்தே தொடங்கியது. திருவள்ளுவர் தினமான 16-ந் தேதி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை அன்றும் மற்ற விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிற்பனை அதிகமாக இருந்தது.

13-ந் தேதி 5,275 பெட்டி மதுபான வகைகளும், 1,796 பெட்டி பீர் வகைகளும் மது பிரியர்கள் வாங்கியுள்ளனர். இதன்மூலம் ரூ.3 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 800-க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. 14-ந் தேதி 4,927 பெட்டி மதுபான வகைகளும், 1,400 பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகி ரூ.2 கோடியே 90 லட்சத்து 67 ஆயிரத்து 400 வசூலாகியது.

15-ந் தேதி 6,550 பெட்டி மதுபான வகைகளும், 2,025 பெட்டி பீர் வகைகளும் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.3 கோடியே 89 லட்சத்து 61 ஆயிரத்து 945-க்கு விற்பனை நடந்துள்ளது. 17-ந் தேதி 4,884 பெட்டி மதுபான வகைகளும், 1,371 பெட்டி பீர் வகைகளும் விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் ரூ.2 கோடியே 88 லட்சத்து 58 ஆயிரத்து 810-க்கு விற்பனை நடந்தது.

இவ்வாறு கடந்த 4 நாட்களில் ரூ.12 கோடியே 91 லட்சத்து 33 ஆயிரத்து 955-க்கு மது விற்பனையாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில் (4 நாட்கள்) ரூ.12 கோடியே 24 லட்சத்து 11 ஆயிரத்து 730-க்கு விற்பனை நடந்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.67 லட்சத்து 22 ஆயிரத்து 225-க்கு அதிகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.


Next Story