பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது


பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 19 Jan 2019 10:00 PM GMT (Updated: 19 Jan 2019 1:05 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

தைப்பூச திருவிழா

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

காலை 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது.

பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் தங்க சப்பரத்தில் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை சேர்கிறார்.

பாத யாத்திரை பக்தர்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்து, பாத யாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக வருகின்றனர்.

பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் உருவ படத்தை வைத்து, அவரது புகழை பாடியவாறு பாத யாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர். கோவில் வளாகம், விடுதிகள், மண்டபங்களில் பக்தர்கள் தங்கியிருந்து வழிபடுகின்றனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story