நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது.
நெல்லை,
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை நடக்கிறது.
தைப்பூச திருவிழாதைப்பூச திருவிழா தை மாதம் பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி திதியும் கூடி வரும் நாளாகும். இந்த நாளில் முருகபெருமானையும், சூரபத்மனை அழித்த அவருடைய சக்தி வேலையும் வழிபட்டால் மக்களின் இன்னல்கள் நீங்கி சுபிட்ஷம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் தைப்பூச நட்சத்திரத்தில் தான் சிவபெருமான் சிதம்பரத்தில், பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர் மற்றும் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் காட்சி அளித்தார். இதனால் தைப்பூசத்தன்று சிவபெருமானையும் வழிபட்டால் அவருடைய அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமி–அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், 10 மணிக்கு குடவறை கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜையும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
சாலை குமாரசாமி கோவில்நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சுவாமிக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. நெல்லை வண்ணார்பேட்டை குட்டத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில், திரிபுராந்தீசுவரர் கோவிலில் உள்ள முருகருக்கும், சண்முகருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், பூஜையும் நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நாளை மாலை 3 மணிக்கு தைப்பூச தீர்த்தவாரி விழா நெல்லை கைலாசபுரம் சிந்துபூந்துறை மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 11 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவி ஆகியோர் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லையப்பர் நெடுஞ்சாலை கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு செல்கிறார்கள். அங்கு தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் புறப்பட்டு நெல்லையப்பர் கோவிலை வந்து அடைகிறார்கள். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சவுந்திர சபா மண்டபத்தில் நடராஜ திருநடன காட்சி நடைபெறுகிறது. 23–ந் தேதி இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் கோவில் வெளி தெப்பத்தில் தெப்ப திருவிழா நடக்கிறது.