வாசுதேவநல்லூரில் தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் மோசடி வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


வாசுதேவநல்லூரில் தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் மோசடி வங்கி முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 Jan 2019 3:30 AM IST (Updated: 19 Jan 2019 7:57 PM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூரில் தொழிலாளியிடம் ஆன்லைன் மூலம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூரில் தொழிலாளியிடம் ஆன்லைன் மூலம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர், வங்கியின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் ராமையா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவருடைய மகன் சந்திரன் (வயது 40). கூலி தொழிலாளியான இவர், புதிய தமிழகம் கட்சியின் வாசுதேவநல்லூர் பேரூர் கழக நிர்வாகியாக உள்ளார். இவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக கடந்த மாதம் தனியார் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் அந்த விண்ணப்பத்தை ஏற்ற தனியார் வங்கி, வாசுதேவநல்லூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாடிக்கையாளராக உள்ள சந்திரன் கணக்கில் ரூ.1 லட்சத்தை செலுத்தியது.

பின்னர் வங்கிகளின் தொடர் விடுமுறையை தொடர்ந்து, நேற்று முன்தினம் சந்திரன் தனது கணக்கில் பணம் எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது தனது கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரத்தை எடுத்துள்ளார். பின்னர் வங்கி கணக்கு புத்தகத்தை பார்த்தபோது ரூ.30 ஆயிரத்தை காணவில்லை.

வங்கியில் வாக்குவாதம்

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். உடனே வங்கி அதிகாரிகள், சந்திரன் வங்கிக் கணக்கை சரிபார்த்தனர். அப்போது அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சமும் எடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்ட சந்திரன், நான் ரூ.70 ஆயிரம் மட்டும்தான் எடுத்தேன். 30 ஆயிரம் ரூபாயை நான் எடுக்கவில்லை எனக்கூறி வங்கி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தார்.

இதைக் கேட்ட வங்கி அதிகாரி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு, பின்நம்பரை யாரேனும் போன் செய்து கேட்டார்களா? என்று கேட்டுள்ளார். அதற்கு ஆமாம் என்ற சந்திரன், உங்களுடைய வங்கியில் இருந்துதான் பேசியதாகவும், அதனால் அனைத்து விவரங்களையும் கூறியதாகவும் தெரிவித்தார். இதனால் சந்திரனுடைய வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

பின்னர் வங்கி நிர்வாகம், நாங்கள் இதுபோன்று எப்போதும் தொலைபேசியில் வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்பதில்லை. அதேபோல் வங்கி வாடிக்கையாளர்களும் எந்த தகவலையும் யாருக்கும் கொடுக்கக்கூடாது என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆன்லைன் (இணையதளம்) மூலம் இதுபோன்று ஏமாறி வருகிறார்கள் என்றது.

தீக்குளிக்க முயற்சி

அதனை தொடர்ந்து சந்திரனுடைய கணக்கு அறிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துக் கொடுத்தது. அதனை கொண்டு போலீசில் புகார் செய்யுமாறு அறிவுறுத்தியது. அதன் பேரில் வாசுதேவநல்லூர் போலீசில் சந்திரன் புகார் கொடுக்க சென்றார். அங்கு அவரது புகாரை போலீசார் ஏற்க மறுத்தனர். ஆன்லைன் மூலம் மோசடி தொடர்பாக நெல்லையில் உள்ள குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுக்குமாறு கூறினர்.

இந்தநிலையில் வங்கி நிர்வாகமும் தனக்கு சரியான பதிலை தரவில்லை. போலீசாரும் தன்னுடைய புகார் மனுவை ஏற்கவில்லை என்ற விரக்தியில், நேற்று காலை வங்கியின் முன்பு சந்திரன் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். எனினும் மண்எண்ணெய் ஊற்றியதில், அவரது உடலில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்பட்டன. இதனால் அவரை 108 ஆம்புலன்சு மூலம் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story