ஊட்டி நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு உடனடியாக அகற்ற கோரிக்கை
ஊட்டி நகராட்சியில் வாகன நிறுத்துமிடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனை உடனடியாக அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி,
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஊட்டிக்கு வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து 28 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. அப்போது சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், திரளான சுற்றுலா பயணிகள் சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க ஊட்டிக்கு வருகிறார்கள். அவர்கள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் வருகை தருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை சீசனின் போது, வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லை. இதனால் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் பிங்கர்போஸ்ட் வழியாக காந்தல் பகுதியில் ஊட்டி நகராட்சி சார்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. அங்கு கட்டணம் செலுத்தாமல் வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊட்டியில் இருந்த டாஸ்மாக் குடோனுக்கு மதுபானங்களை கொண்டு வந்த லாரிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது டாஸ்மாக் குடோன் குன்னூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், அங்கு லாரிகள் நிறுத்தப்படுவது இல்லை.
ஊட்டி நகராட்சி வாகன நிறுத்துமிடத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக வாகன நிறுத்துமிடத்தில் ஆட்டோமொபைல் கடை, வாகனங்களை பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் மற்றும் தகரத்தால் ஆன ஷெட்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா வாகனங்களை அங்கு நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் இருந்து மணிக்கூண்டு வழியாக மாரியம்மன் கோவில் சந்திப்பு, ஹோபர்ட் பள்ளி வரை பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதை சாலையில் இருந்து 1½ அடி உயரம் உயர்த்தப்பட்டதுடன், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மக்கள் செல்ல நகராட்சி வழிவகை செய்தது. ஆனால், சமீபகாலமாக மார்க்கெட்டில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் வெளியாட்கள் நடைபாதையை ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ள கடைகள், ஷெட்டுகள், ஒர்க்ஷாப்பை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.